‘சென்னை ஒன்’ செயலி தொடக்கம்: பஸ், ரயில், மெட்ரோ, கார், ஆட்டோ – ஒரே பயணச்சீட்டில் பயணம்!

நாட்டிலேயே முதன்முறையாக, பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், கார், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கக் கூடிய ‘சென்னை ஒன்’ (CHENNAI ONE) மொபைல் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2-வது ஆணையக் கூட்டத்தில், இச்செயலி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த செயலி iOS மற்றும் Android தளங்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்:

  • பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், கேப் மற்றும் ஆட்டோக்களை ஒரே QR டிக்கெட் மூலம் ஒருங்கிணைக்கலாம்.
  • பொதுமக்கள் அனைத்து போக்குவரத்து சேவைகளின் நிகழ்நேர தகவலை அறியலாம்.
  • UPI அல்லது கட்டண அட்டைகள் வழியாக டிக்கெட்டுகள் பெறலாம்.
  • ஒரே பதிவின் மூலம் பல்வேறு போக்குவரத்துகளை எளிதாகப் பயன்படுத்தலாம்.

மேலும், இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கின்றது.

தமிழக அரசு, “இந்தச் செயலி பொது போக்குவரத்து துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக இருக்கும்; எளிதாக கட்டணம் செலுத்தி டிக்கெட்டைப் பெற்று, ஒரே முறையில் பயணம் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளது.

Facebook Comments Box