70 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர்: தமிழக மின் வாரிய அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் 33/11 கி.வோ திறனில் 70 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சீராக மின் விநியோகத்தை உறுதிசெய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் மறு சீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.1,500 கோடியில் 133 புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள துணை மின்நிலையங்களில் 52 பவர் டிரான்ஸ்ஃபார்மர்களைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய துணை மின்நிலையங்களை அமைக்க டெண்டர் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது முதற்கட்டமாக 70 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 33/11 கி.வோ திறனில் 133 துணை மின்நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அவை அமைவுள்ள சூழல், இட அமைப்புக்கு ஏற்ப உட்புற மற்றும் வெளிப்புற துணை மின்நிலையங்கள் என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு வெளிப்புற துணை மின்நிலையம் அமைக்க ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை, உட்புற துணை மின்நிலையம் அமைக்க ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 70 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டரை மின்வாரியம் கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளியில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட உடன் பணிகளைத் தொடங்கி, 6 மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மீதமுள்ள 63 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்படும். இந்த 133 துணை மின்நிலையங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்.

கிராமப் பகுதிகளில் மற்றும் சிறு நகரங்களில் வெளிப்புற துணை மின்நிலையங்கள், மாநகராட்சி மற்றும் பெருநகரங்களில் உட்புற துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்

Facebook Comments Box