நாகர்கோவில் திமுக கூட்டம் – ஆம்புலன்ஸ் அனுமதி மறுப்பு பேச்சால் மேயர் சர்ச்சை
நாகர்கோவிலில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்ற சாலையில், “ஆம்புலன்ஸை விட வேண்டாம்” என்று மேடையில் பேசிய மேயர் மகேஷின் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 20ஆம் தேதி மாலை, அண்ணா விளையாட்டரங்கம் அருகே நடந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மான கூட்டத்தில், எம்.பி. கனிமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கூட்டத்தில் தொண்டர்கள் அமர சாலையில் நாற்காலிகள் வைக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அப்போதே ஒரு ஆம்புலன்ஸ் வந்தபோது, “இனி இங்கிருந்து ஆம்புலன்ஸ் வரக்கூடாது, வாகனங்களை மீன் மார்க்கெட் வழியாக மாற்றுங்கள்” என்று மேயர் மகேஷ் மைக்கில் கூறினார். உடனடியாக கனிமொழி எம்.பி. எழுந்து, “ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்கள்” என்று அறிவுறுத்தினார். பின்னர் ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மேயர் கூறிய இந்தக் கருத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.