பழங்குடியின மொழிகள் பாதுகாப்பு – ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவண பதிவு: உதயநிதி பெருமிதம்
பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்கும் முயற்சியாக, ரூ.3 கோடி மதிப்பில் அவற்றை ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு செய்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையின் நந்தம்பாக்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் “ஆதி கலைக்கோல்” எனும் 3 நாள் பயிற்சி பட்டறை தொடங்கியது. இதை தொடங்கி வைத்த உதயநிதி, அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகளை பார்வையிட்டார்.
அவர் உரையாற்றியபோது, “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கலை வடிவங்கள் சமூகத்திற்கான போராட்டங்களையும் வரலாறுகளையும் பிரதிபலிக்கின்றன. அடித்தட்டு மக்களின் பாடல்கள், ஓவியங்கள், நடனங்கள் அனைத்திலும் சமூக உணர்வு, கோபம், ஏக்கம், எதிர்பார்ப்பு பிரதிபலிக்கின்றன. ஆனால், கலைஞர்களுக்கான இடம் மற்றும் மதிப்பில் சமத்துவம் இல்லை. இந்த ஏற்றத்தாழ்வை உடைக்க திமுக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, பழங்குடியின மொழிகளை ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு செய்து பாதுகாக்கும் பணிகள் ரூ.3 கோடி செலவில் நடைபெற்று வருகிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.