உடுமலை சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் வருமானவரி துறையின் திடீர் ரெய்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் செயல்பட்டு வரும் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் இன்று காலை வருமானவரி துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சுமார் 30 ஆண்டுகளாக கறிக்கோழி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம், தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பண்ணையாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
நிறுவனத்தின் முக்கிய அலுவலகம் கோவையில் அமைந்துள்ளது. சவுந்திரராஜன் மற்றும் சுந்தரராஜன் ஆகிய சகோதரர்கள் உரிமையாளர்களாக உள்ள இந்நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் 3 இன்னோவா கார்களில் வந்த 10 பேர் கொண்ட வருமானவரி அதிகாரிகள், உடுமலை சுகுணா ஃபுட்ஸ் பதிவு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது உடுமலை போலீசார் அங்கு வந்து, சோதனைக்காக வந்த அதிகாரிகள் குறித்து விசாரித்தனர்.
பெண் துணை ஆணையர் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை, நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் ஒரே நேரத்தில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.