ரூ.1.50 கோடி அபராதம்: வருமானவரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் வழக்கு!

வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமானவரித் துறையின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தவெக தலைவர், நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

2016–17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கில், விஜய் ரூ.35 கோடி 42 லட்சத்து 91,890 என அறிவித்திருந்தார். ஆனால், 2015-ல் அவரது இல்லத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையின் போது, ‘புலி’ படத்திற்காக பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை அவர் கணக்கில் காட்டவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து, வருமானவரித் துறை 2022 ஜூன் 30-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து விஜய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில்,

“அபராதம் விதிக்க வேண்டுமெனில், சட்டப்படி 2019 ஜூன் 30-க்குள் விதிக்க வேண்டும். ஆனால் 2022-ல் தாமதமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அது செல்லாது; ரத்து செய்யப்பட வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த வருமானவரித் துறை,

“சட்டப்படி விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு முறையானது” என வாதிட்டது.

இதையடுத்து நீதிபதி, இதேபோன்ற மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்ய விஜய் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்.10-க்கு தள்ளி வைத்தார்.

Facebook Comments Box