கோவை, நீலகிரியில் நாளை கனமழை வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நாளை (செப்டம்பர் 25) கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை மேற்கு வங்கம் மற்றும் அருகிலுள்ள வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காணப்பட்டது. இது இன்று பலம் குறையக்கூடும்.

தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை மத்திய கிழக்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 26-ம் தேதி தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரத்திற்கு அருகிலுள்ள வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்து 27-ம் தேதி தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதன் தாக்கத்தால், தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். குறிப்பாக, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 95° பாரன்ஹீட், குறைந்தபட்சம் 80.6° பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

மேலும், தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரத்தை ஒட்டிய வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 8.30 மணி வரையில்) அதிகபட்சமாக விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box