விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ரூ.40 கோடி கையாடல் முயற்சி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, ரூ.40 கோடி கையாடல் செய்து அனுப்ப திட்டமிட்ட விவகாரத்தில் புழல் சிறையில் உள்ள இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் இலங்கையைச் சேர்ந்த தமிழரான லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா (45) அடைக்கப்பட்டுள்ளார். போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி, சென்னை விமான நிலையத்திலிருந்து, பெங்களூரு செல்ல முயன்றபோது 2021-ம் ஆண்டில் தமிழக கியூ பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கூட்டாளிகள் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் டென்மார்க் நாட்டில் தலைமறைவாக உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உமாகாந்தன் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
அவர்கள் மேரி பிரான்சிஸ்காவை காவலில் எடுத்து விசாரித்தபோது, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மும்பையில் உள்ள வங்கி மூலம் ரூ.40 கோடி அனுப்ப முயன்றது தெரியவந்தது. ஹமிதா ஏ லால்ஜி என்பவர் மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.40 கோடி சேமிப்பு பணம் வைத்திருந்தார். அவர் இறந்து விட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்தது.
இதை தெரிந்து கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் உமாகாந்தன், அந்த பணத்தை தங்கள் இயக்கத்துக்காக போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்ற முடிவு செய்து இலங்கை தமிழரான மேரி பிரான்சிஸ்காவை இந்தியா அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் மேரி பிரான்சிஸ்கா தமிழக கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வங்கியில் இருந்த ரூ.40 கோடி பணத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து அனுப்ப முயன்ற சம்பவம் குறித்து தற்போது அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மேரி பிரான்சிஸ்காவிடம் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். வங்கியில் இருக்கும் பணத்தை அபகரிக்க அனுப்பியது யார்; ரூ.40 கோடியை அபகரிக்க இந்தியாவில் யாரெல்லாம் உதவினார்கள்; போலி ஆவணங்கள் எப்படி பெறப்பட்டன; வங்கியில் அபகரிக்கப்படும் பணத்தை வெளிநாட்டுக்கு எப்படி அனுப்ப திட்டமிட்டிருந்தனர்; தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு பணத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.