ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.87 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சமூகத் தணிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதற்கான திட்டத்தில் கூட திமுகவினர் ஊழல் செய்வதும், அதை அரசு கண்டுகொள்ளாததும் கண்டிக்கத்தக்கவை.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூகத் தணிக்கையில் நாடு முழுவதும் நடப்பாண்டில் மட்டும் ரூ.110 கோடிக்கும் கூடுதலாக முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 6,470 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட சமூகத் தணிக்கையில் ரூ.26.57 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

கடந்த 2020-21ம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 6 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.1,000 கோடி அளவுக்கும், தமிழகத்தில் மட்டும் ரூ.87 கோடி அளவுக்கும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் முழுமையாக ஆய்வு நடத்தும் போது ஊழலின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மொத்தம் ரூ.26.57 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் வெறும் ரூ.1.39 கோடி மட்டும் தான் மீட்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கடந்த ஆறு ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.87 கோடி ஊழலில் ரூ.38 கோடி மட்டுமே திரும்ப வசூலிக்கப் பட்டுள்ளது.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசு, தவறுகள் கண்டறியப்பட்ட பிறகு முறைகேடு செய்யப்பட்ட நிதியை மீட்டெடுப்பதிலும் அக்கறை காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது. இது ஊழலுக்கு துணை போகும் செயலாகும்.

ஊரக வேலைத் திட்டத்தின்படி பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் முதன்மைக் குற்றச்சாட்டு ஆகும். லட்சக் கணக்கானோருக்கு அவர்கள் செய்த பணியின் அளவு அதிகரித்து காட்டப்பட்டு, பணம் வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டி சுருட்டப் பட்டிருக்கிறது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்ற மோசடிகள் குறித்த அனைத்து விவரங்களும் தமிழக அரசிடம் உள்ளன.

ஊரக வேலை திட்டம் முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகத் தான் சமூகத் தணிக்கை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அதில் தெரியவரும் முறைகேடுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முயல்கிறது என்பது ஐயமின்றி உறுதியாகி யுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இத்தகைய முறைகேடுகள் நடப்பது புதிதல்ல; அவற்றை தடுத்து நிறுத்துவதும் கடினம் அல்ல. ஆனால், தமிழகத்தை ஆளும் கட்சி அதன் கடை நிலை நிர்வாகிகள் ஊழல் செய்வதற்கான வளமாக இந்தத் திட்டத்தை மாற்றி வைத்திருப்பது தான் இந்த ஊழல் தொடர்வதற்கு காரணம் ஆகும்.

எடுத்துக் காட்டாக தமிழ்நாட்டில் 2024-25ம் ஆண்டில் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தியதில் 78,784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் மூலம் ரூ.14 கோடிக்கும் கூடுதலான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூகத் தணிக்கையில் தெரிய வந்தது. அது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நடப்பாண்டில் ஊழல் நடைபெற்றிருக்காது. ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதுடன், ஊழலில் ஈடுபட்டவர்களையும் திமுக அரசு காப்பாற்றத் துடிப்பதால் தான், திமுக ஆட்சியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தத் திட்டத்தில் முறைகேடு நடக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஏழை மக்களுக்கு வேலை வழங்கப்படும் நாள்களை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இந்தத் திட்டத்தில் நடைபெறும் ஊழல்களைத் தான் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. 2025ம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 10 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கபட்டுள்ளது.

அதிலும் கூட மொத்தம் 74.99 லட்சம் குடும்பங்கள் வேலை கோரியுள்ள நிலையில், 46.19 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் வேலை வழங்கப் பட்டுள்ளது. ஏறக்குறைய 29 லட்சம் குடும்பங்களுக்கு இன்று வரை ஒரே ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை என்பது தான் கசப்பான உண்மை ஆகும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் நடைபெறும் ஊழல்களும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழக மக்களுக்கு போதிய வேலை கிடைக்காததற்கு முழு முதல் காரணம் திமுக அரசு தான்.

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தினால் வேளாண் தொழிலாலர் பற்றாக்குறை ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் கூட, அது ஊரக வறுமையை ஒழிப்பதற்கான உன்னதத் திட்டம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஊழலால் அந்தத் திட்டம் முடங்கி விடக்கூடாது. எனவே, இந்த ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்‌.

Facebook Comments Box