ஜிஎஸ்டி புதிய வரிவிதிப்பு: பால் பொருட்கள் விலையை குறைக்க ஆவின் மீது நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் வலியுறுத்தல்
ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்குப் பிறகு, பால் பொருட்களின் விலையை குறைக்காத ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, தமிழக பால் முகவர்கள் நலச்சங்கத்தினர் ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ஜிஎஸ்டி (கவுன்சில்) அலுவலகத்தில், ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் லோகநாதன் ரெட்டியிடம், சங்கத் தலைவர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் மனுவை நேற்று சமர்ப்பித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் கீழ் யு.எச்.டி பால், பனீர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நெய், வெண்ணெய், சீஸ் போன்ற பால் பொருட்களுக்கு 12% இருந்த ஜிஎஸ்டி 5% ஆகவும், ஐஸ்கிரீம் வகைகளுக்கு 18% இருந்ததை 5% ஆகவும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்ததால், தனியார் பால் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அதன் பலனை வழங்கும் விதமாக விலைகளை குறைத்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனம் இதுவரை பால் பொருட்களின் விலையை குறைக்கவில்லை. மேலும், வெளிப்படையான விலைப்பட்டியல் கூட வெளியிடப்படவில்லை. எங்கள் வலியுறுத்தலுக்கும் ஆவின் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மத்திய அரசும் ஜிஎஸ்டி கவுன்சிலும் ஆவின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆவின் நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதாக ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் உறுதி அளித்ததாக, பின்னர் பொன்னுசாமி தெரிவித்தார்.