கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே, ஏமப்பேர் ரவுண்டானாவில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவுடைய இடத்தில் 46.30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிராக, கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த குமரேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அல்லது நகராட்சி ஆணையர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சியின் சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்வது குறித்து மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டதில்லை என்றும், தனியார் சொந்த நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பேருந்து நிலையம் அமைக்கப்படும் பகுதி நீர்நிலையைக் கொண்டது என்பதால் பல கால்வாய்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
பொதுமக்களின் எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல், புதிதாக கட்டப்பட உள்ள பேருந்து நிலையம் நகர பகுதிக்குக் கூட 6 கிலோமீட்டர் தூரத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்றும், விதிகளை மீறி கட்டுமானம் நடைபெறுகிறது என்றும் மனுவில் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டதால் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுத்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அடுத்த மாதம் 24-ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தனர்.