‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை புறக்கணித்து வருவாய்த் துறையினர் போராட்டம்

தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.பி. முருகையன் கூறுகையில், “‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஒரு வாரத்தில் 4–5 நாட்கள் நடத்தச் சொல்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றை அன்றே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணிகளை நிறைவேற்ற நள்ளிரவு வரை நேரம் செல்கிறது. பின்னர் கூகுள் மீட் வழியாக ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

வழக்கமான பணிகளுடன் சேர்த்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட பணிகளையும் வருவாய்த் துறையினர் பார்க்க வேண்டியதால் கடுமையான அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளோம். கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நில அளவர்கள், நில அளவை ஆய்வாளர்கள் ஆகிய 42,000 பேர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்க Statewide, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், முகாம்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட பணியை வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து நடத்துகிறார்கள்.

இந்த நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் போதுமான காலஅவகாசம் வழங்காமல் அவசர கதியில் பணிகளை முடிக்க அரசு நிர்ப்பந்தம் செய்கிறது என்ற காரணத்தால், வருவாய்த் துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், வருவாய் கிராம ஊழியர் சங்கம் உள்பட பல சங்கங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று காலை முதல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்லாமல், மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால், மனுக்களை பெறுதல், பதிவுசெய்தல், கணினியில் உள்ளீடு செய்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனிடையே, மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு குடிமைப்பணி அலுவலர் சங்கம் உள்பட 13 சங்கங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வருவாய்த் துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், “மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செப்.25 முதல் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்களில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அதே நேரத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பது போன்ற முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box