“என்னிடம் யாரெல்லாம் பேசினர் என்பது சஸ்பென்ஸ்” – செங்கோட்டையன் விளக்கம்
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பல நண்பர்கள் செங்கோட்டையனிடம் கருத்துக்களை பகிர்கிறார்கள். அவர்களின் மனதில் ஒருமித்தக் கருத்துகள் இருக்கின்றன. “யார் என்னிடம் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது பகிர முடியாது” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி கூறியதாவது: “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அந்தப் பணியை 10 நாட்களுக்குள் செய்ய வேண்டும்” எனக் கெடு விதித்தார். இதையடுத்து, அவர் வகித்து வந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்து உத்தரவிட்டார்.
இந்த பரபரப்பான சூழலில், எடப்பாடி பழனிசாமி நேற்று “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பிரச்சார பயணத்தை தொடங்கச் சேலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு காரில் சென்றார். அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவினர் வரவேற்றனர். இதற்கு பூர்வாங்க, செங்கோட்டையன் 2 நாட்களுக்கு முன்பே காரில் சென்னை கிளம்பி, ஒருங்கிணைப்பு சம்பந்தமாக ஓபிஎஸ், டி.டி.வி. தினகரனை சந்திக்க உள்ளதாக தகவல் பரவியது.
சென்னையிலிருந்து திரும்பிய செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“என் மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்று வந்தேன். சென்னை சென்றவுடன் சொந்த வேலையை பார்த்து இன்று வீடு திரும்பியுள்ளேன். அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. தவறான செய்திகள் வந்தவுடன் பல தொலைக்காட்சிகளுக்கு தகவல் தெரிவித்தேன். என் நோக்கம் இந்த இயக்கத்தை வலிமை பெறச் செய்வது, அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பது மட்டும்தான்.
எம்ஜிஆர் கனவு, ஜெயலலிதா சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, 100 ஆண்டுகள் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என கூறினார். அந்தக் கனவை நிறைவேற்ற பல தொண்டர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்து வருகின்றனர். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் எனும் நோக்கத்தோடுதான் நான் கருத்து தெரிவித்தேன்.
என்னைப் பொருத்தவரையில் ஒருங்கிணைப்புக்கு குறிக்கோள் ஒன்றுதான். அதன்படி யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடமும் பேசவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்”
ஒருங்கிணைப்புப் பணியின் நிலை குறித்து செங்கோட்டையன் கூறியதாவது:
“பல நண்பர்கள் என்னிடம் பேசுகிறார்கள். அவர்களின் மனதில் ஒருமித்த கருத்துகள் இருக்கின்றன. யார் என்னிடம் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை இப்போது கூற இயலாது. எல்லோருடைய மனதிலும் ஒருமித்த நோக்கம், வெற்றி பெறவேண்டும் என்ற மனநிலை உள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்பு கொண்டார்களா என்பதை இப்போது சொல்வது சரியாகாது. யார் பேசினார்கள், யார் பேசவில்லை என்பது தற்போது தெரிவிக்க இயலாது. நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். தற்போதைய சூழ்நிலையில் யாரையும் சந்திக்க வாய்ப்பு இல்லை. வாய்ப்பு இருந்தால் தகவல் தெரிவிக்கிறேன்”
அதேவேளையில், ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து 2 மணி நேர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியே வந்துள்ளது.