செல்வப்பெருந்தகையின் விசுவாசத்தைப் பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை: ஆ.ராசா
“தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பாஜகவுடன் கை கோர்த்துத் துரோகம் புரிந்த எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் விசுவாசம் குறித்து பேச எந்த உரிமையும் இல்லை” என திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக சாடியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சுந்தரா டிராவல்ஸ் பிரச்சாரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பேசியபோது, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தரக்குறைவாகவும், இழிவாகவும் குறிப்பிட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியதாகும். திமுக கூட்டணித் தலைவர்களை தொடர்ந்து குறைத்து மதித்து, தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பழனிசாமியின் வழக்கமாகி விட்டது.
செல்வப்பெருந்தகையை ‘பிச்சைக்காரர்’ என்றும், ‘ஒட்டுப் போட்ட சட்டைப் போட்டவர்’ என்றும் கூறியிருப்பது அரசியல் நாகரிகத்துக்கு எதிரானது. ஒரு தலைவருக்குத் தகுந்த பண்புகள் பழனிசாமிக்கு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டிற்கு சென்று, திரும்பும்போது காரில் முகம் மூடிக்கொண்டு வந்தவரே, பிறரைப் பிச்சைக்காரர் என்று சொல்வது எவ்வளவு நியாயம்?
தன்னுடைய சிதைந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தும், மக்களை விரக்தியடையச் செய்யும் என்பதை நன்றாக அறிந்தும், பழனிசாமி வார்த்தைகளை எவ்வித தயக்கமின்றி பொதுவெளியில் பயன்படுத்துகிறார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என அவர் கூறியும், யாரும் அதிமுக கூட்டணியில் சேர தயாராக இல்லை. ஏற்கனவே பன்னீர்செல்வமும் தினகரனும் விலகிச் சென்றுவிட்டனர். இதனால் பழனிசாமியின் பேச்சுகள் நாளுக்கு நாள் ஆவேசமாக மாறிவருகின்றன.
அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் ஒரு பக்கம் முயற்சி செய்கிறார். அதேசமயம், துரோகத்தின் உருவமாக உள்ள பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என தினகரனும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். பாஜக தலைமைக்கு அடிமையாகக் குனிந்தபடியே பழனிசாமி நடக்கிறார். ஆனால் திமுக கூட்டணியைப்பற்றி பேசும்போது மட்டும் வீராவேசம் காட்டுகிறார்.
தன்னுடைய கட்சிக்குள் யாரை நம்புவது என்பதிலேயே குழப்பமடைந்துள்ள பழனிசாமி, திமுக கூட்டணியில் பிளவு உள்ளது எனக் கூறுவது நகைச்சுவையானது.
தமிழக மக்களை ஏமாற்றும் பாஜகவுடன் இணைந்து அரசியல் செய்கிற எடப்பாடி பழனிசாமிக்கு, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் விசுவாசம் குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை” என ஆ.ராசா தனது அறிக்கையில் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.