தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்தை நாடு முழுவதும் பாராட்டுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

“தமிழகம் கல்வியில் அடைந்த முன்னேற்றத்தை, இந்தியாவின் பல மாநிலங்கள் கவனித்து வருகின்றன” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழகம்’ கல்வி முன்னேற்ற விழா மற்றும் நடப்பு கல்வியாண்டுக்கான புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட ஏழு அரசு திட்டங்களின் மூலம் பயனடைந்து உயர்ந்த நிலைகளில் பணியாற்றி வரும் பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். தொடர்ந்து, இந்த கல்வியாண்டில் மட்டும் 2 லட்சத்து 65,318 மாணவர்கள் பயன்பெற இருக்கும் இந்த இரு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் உரையாற்றியதாவது:

“இந்த விழா எங்களை பாராட்டிக்கொள்ள அல்ல. உங்களை கௌரவிப்பதைப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம். தெலங்கானாவில் உள்ள சிறந்த திட்டங்களை தமிழகம் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது. அதுவே ஆரோக்கியமான அரசியல். கல்வியின் மூலம் அடுத்த தலைமுறை முன்னேறும். சாதி எனும் சதி காரணமாக கல்வி மறுக்கப்பட்ட வரலாறு நமக்குண்டு. நீதிக் கட்சி மதிய உணவு திட்டத்தைத் தொடங்கியது; காமராஜர் அதை மாநிலம் முழுவதும் பரவச் செய்தார். இன்று அது காலை உணவு திட்டமாக விரிவடைந்துள்ளது.

ஒரு உணவு அளிப்பதாலோ, மாதம் ரூ.1,000 கொடுப்பதாலோ என்ன மாறும் என்று சிலர் கேட்கலாம். ஆனால், காலை உணவு திட்டத்தால் மாணவர் வருகை அதிகரித்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தால் பிளஸ்-2 முடித்தவர்களில் 75% பேர் உயர்கல்வியில் சேர்ந்து வருகின்றனர். தமிழகம் பெற்ற கல்வி முன்னேற்றத்தை இந்திய மாநிலங்கள் பின்பற்றத் திட்டமிடுகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு இடையூறு செய்ய நினைக்கிறது. நம்மைத் தடுக்க முயற்சிப்பவர்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். கல்வியில் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாகும்” என்றார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உரையாற்றியதாவது:

“மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்கு திட்டங்களை, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் சிறப்பாக நிறைவேற்றுகின்றனர். தமிழகம் கல்வி, விளையாட்டு துறைகளில் முன்னுதாரணம். காலை உணவு, தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் பாராட்டத்தக்கவை. காலை உணவு திட்டத்தை தெலங்கானாவிலும் அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்துகிறோம்.

சமூக நீதி தொடர்பான பல திட்டங்களை நாங்களும் தமிழகத்தைப் பின்பற்றி செயல்படுத்துகிறோம். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கு 69% இடஒதுக்கீடு வழங்க இருக்கிறோம். கல்விக்கும் விளையாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆண்டுதோறும் தெலங்கானாவில் 1.10 லட்சம் பேர் பொறியியல் பட்டம் பெறுகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ‘யங் இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் விளையாட்டிற்கான அகாடமி தொடங்கப்படும்; அதில் தமிழக மாணவர்களுக்கும் முக்கிய இடம் வழங்கப்படும்” என்றார்.

இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அன்பில் மகேஸ், மதிவேந்தன், டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், திமுக எம்.பி. கனிமொழி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது – இருளர் மக்களுக்காக பாடுபடும் பிரபா கல்யாணி, பள்ளிக்கு நிலம் வழங்கிய பூரணம்மாள், கல்விப் பணியாற்றும் அகரம் அறக்கட்டளை ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மேலும், மாணவியரின் உரையால் அமைச்சர் அன்பில் மகேஸ் உணர்ச்சி வசப்பட்டார். அரியலூரைச் சேர்ந்த மணிவாசகன் (அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்) தனது தாய் துப்புரவு பணியாளராக உள்ளார் எனச் சொல்ல, முதல்வர் ஸ்டாலின் “அவர் தூய்மைப் பணியாளர்” என்று திருத்தி, அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மற்றொரு மாணவி சுப்புலட்சுமி, முதுநிலைப் படிப்பிற்கும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்காக முதல்வர் தனது பேனாவை பரிசளித்தார்.

Facebook Comments Box