விவசாயிகளுக்கு வழங்கிய 56 வாக்குறுதிகளில் வெறும் 8 மட்டுமே நிறைவேற்றம் – திமுகவை குற்றம்சாட்டிய அன்புமணி
விவசாயிகளுக்காக தனியாக 56 வாக்குறுதிகளை திமுக அரசு அளித்திருந்தது. ஆனால் அவற்றில் வெறும் 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 48 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணமாக 100 நாட்கள் நடைப்பயணத்தில் ஈடுபட்டு வரும் அன்புமணி, திருச்சியில் மனைவி சௌமியாவுடன் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோயிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும் வழிபாடு செய்தார். பின்னர் மாம்பழச்சாலையில் காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் மற்றும் அய்யாக்கண்ணை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அங்கு பேசிய அவர்,
- தமிழகத்தின் 22 மாவட்டங்கள் காவிரி ஆற்றை குடிநீர், பாசனத்திற்காக நம்புகின்றன.
- வருடாந்திர மழை நீரை சரியாக சேமிக்காததால், 2023-இல் மட்டும் 520 டிஎம்சி நீர் கடலில் வீணாகச் சென்றது.
- தமிழக பட்ஜெட்டில் முதன்மை நீர்ப்பாசனத்திலிருந்து தொடங்க வேண்டும்.
- மண் பாதுகாப்பு, பயிர் விலைக்கு உரிய மதிப்பு, விவசாயிகளுக்கான நீர் மேலாண்மை ஆகியவை அவசியம்.
மேலும், கர்நாடக அரசு 15 லட்சம் ஏக்கருக்கான பாசனத் திட்டத்துக்கு ரூ.77 ஆயிரம் கோடி ஒதுக்கினாலும், திமுக அரசு கடந்த 4.5 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என்றும் விமர்சித்தார்.
கொள்ளிடம் ஆற்றின் 110 கி.மீ. நீளத்தில் ஒவ்வொரு 10 கி.மீ.க்கும் தடுப்பணை கட்டினால், டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் பெரிதும் பயன்பெறுவர் என்றார். அதேசமயம், நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
ஒடிசா விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.800, ஆந்திராவுக்கு ரூ.500 ஊக்கத் தொகை வழங்கப்படுவதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டில் வெறும் ரூ.131 மட்டுமே தரப்படுவதாக சாடினார்.
இத்துடன், காவிரி–அய்யாறு திட்டம் மூலம் கடலில் கலக்கும் நீரைத் திருப்பி விட வேண்டும்; இதனால் சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்ற கோரிக்கையுடன், ஆற்றுக்குள் விவசாயிகளுடன் இணைந்து அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.