விஜய்க்கு இணையும் திரளான ஆதரவை சாதாரணமாக கருத முடியாது: பெங்களூரு புகழேந்தி
விஜய்யின் பின்னால் திரண்டு நிற்கும் மக்கள் கூட்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி, கட்சியை அழிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார்; அதில் மாற்று எண்ணமே இல்லை. அவர் யோசிக்காமல் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் கொள்கையைப் படித்த பிறகு அண்ணா, எம்ஜிஆர், பெரியார் குறித்து குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். சசிகலா தவறுதலாக அவரை தேர்ந்தெடுத்துவிட்டார். நான்கரை ஆண்டுகள் முதல்வராக இருந்தது வேதனையாகும். எட்டாம் வகுப்பு மாணவருக்கே தெரிந்த விஷயங்கள் கூட அவருக்குத் தெரியவில்லை. இதனால் அதிமுக இரண்டாம் நிலை தலைவர்களில் குழப்பம் நிலவுகிறது.
அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அவரை சமாதானப்படுத்தினார். இதெல்லாம் டெல்லியில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது. எடப்பாடி, அமித் ஷா சொல்லும் படியே நடக்கிறார். அது மாற வேண்டும்.
அண்ணாமலை, தினகரனை சந்தித்தது கூட்டணிக்காக அல்ல, வரவேற்க வேண்டாம் என்பதற்காகத்தான். பாஜக அண்ணாமலை பெயரால் ஓடியது; அவர் விலகியதால் தரைமட்டமாயிற்று. அமித் ஷா, எடப்பாடி மீது கடும் கோபத்தில் உள்ளார்; அது எப்போது வெளிப்படும் என்பது தெரியாது. எடப்பாடி, ஜோக்கரானார்; அவரது பயணம் வீழ்ச்சியிலேயே முடியும்.
திமுகவுக்கு இப்போது போட்டி விஜய்யின் தவெகவை மட்டுமே. அதிமுக நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்; சீமான் மூன்றாம் இடம் பெறுவார். பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக உள்ளது.
எடப்பாடி அரசியல் ஆதரவின்றி நிற்கிறார். திமுக, திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, கொள்கை ஆகியவற்றை காத்து மத்திய அரசுக்கு எதிராக நின்றாலும், எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. கொடநாடு, ஜெயலலிதா மரணம் போன்றவற்றில் விசாரணை நடக்கவில்லை. முதல்வர் அதனைத் தீர்த்து வைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
ரஜினிகாந்த் சொன்னது போல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. இளைஞர் விஜய் வந்துள்ளார். அவருக்குப் பின்னால் உள்ள இளைஞர் படையினரை எளிதாகக் கருதக் கூடாது. அது வாக்கு வங்கியிலேயே நிலைத்து இருக்கும்.
புதுச்சேரியில் ரங்கசாமி அரசு சிறப்பாக இயங்கி வருகிறது; அது தொடர வேண்டும் என அவர் கூறினார்.