கப்பல் கட்டுமானத் துறையில் 2047-ல் இந்தியா முன்னணி நாடாகும்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனா தகவல்
2047-ஆம் ஆண்டில் கப்பல் கட்டுமானத் துறையில் உலகளாவிய அளவில் இந்தியா முன்னணி நாடாகும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனா தெரிவித்தார். சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் பங்கேற்று, பல்கலைக்கழகத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவித்து, பட்டங்களை வழங்கினார். வெவ்வேறு பாடப்பிரிவுகளில் 2,196 பேர் பட்டம் பெற்றனர்.
பின்னர் அவர் கூறியதாவது: “உலக அளவில் கப்பல் போக்குவரத்துக்கு தேவையான திறமையான மனித வளத்தை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. இத்துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகியதால், கப்பல் போக்குவரத்து தொடர்புடைய படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 1.25 லட்சம் மாலுமிகள் இருந்த நிலையில், தற்போது 3 லட்சமாக அதிகரித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “கப்பல் கட்டுமானத் துறையில் 2047-ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 5 முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கும். அதற்கான உத்திகள், செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, உலகளாவிய உள்கட்டமைப்பும் உருவாக்கப்படுகிறது. கப்பல் கட்டுதல், பழைய கப்பல்களை உடைத்தல், மறு சுழற்சி போன்ற தொழில்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதற்காக விசாகப்பட்டினத்தில் சிறப்பு தொழில்நுட்ப மையம் நிறுவப்பட்டுள்ளது”.
கடல்சார் துறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.70,000 கோடி ஒதுக்கியுள்ளது. அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடல் சார்ந்த 3 முக்கிய அம்சங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, இந்திய கப்பல் போக்குவரத்து துறையில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து செயலர் டி.கே. ராமச்சந்திரன் சிறப்புரை வழங்கினார். அப்போது அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தேசிய நீர்வழிப் பாதையாக அங்கீகரிக்கப்பட்ட 796 கி.மீ. நீளமான காக்கிநாடா–மரக்காணம் இடையிலான பக்கிங்ஹாம் கால்வாய் சரக்கு போக்குவரத்து திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக துணைவேந்தர் மாலினி வி.ஷங்கர் ஆண்டறிக்கை சமர்ப்பித்து வரவேற்றார்.