“திமுகவுக்கு ஏடிஎம் ஆக…” – கரூரில் செந்தில் பாலாஜியை சீண்டிய விஜய்

“திமுக குடும்பத்துக்கு ஊழல் பணத்தை கொண்டு சேர்க்கும் பணியில், ஏடிஎம் ஆக மாஜி மந்திரி செயல்பட்டு வருகிறார்” என்று செந்தில் பாலாஜியை மறைமுகமாக குறிப்பிட்டு, தவெக தலைவர் விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று இரவு 7 மணி அளவில் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தனது பிரச்சார உரையில் கூறியது:

“கரூர் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்த ஊர். இங்கு ஜவுளித் தொழில் சார்ந்த சந்தை மிகவும் பிரபலம். இதுபோல் கரூரை குறித்து பெருமையாக சொல்லிக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் அண்மைக்காலமாக கரூர் என்றாலே இந்தியா முழுவதும் ஒரே ஒருவரின் பெயர் பிரபாலமாக அறியப்படுகிறது. அதற்கு யார் காரணம்? அது யார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

கரூர் மாவட்டம் சார்ந்து தற்போதைய ஆட்சியாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தனர். அதுகுறித்து பார்க்கலாம்:

  • ‘கரூரில் பேரீச்சை வளர்க்க சிறப்பு செயல்படுத்தப்படும். பேரீச்சை வளர்க்க நிதியுதவி வழங்கப்படும்’ என தெரிவித்தனர். ஆனால், பேரீச்சம் பழத்தை கூட கண்களுக்கு காட்டவில்லை.
  • ‘கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது என்னவானது? ஆட்சிக்கு நான்கரை ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது மட்டுமே மத்திய அரசை அமைச்சர் அணுகி கோரிக்கை வைத்துள்ளார். இதுதான் உங்கள் வேகம்? விமான நிலையம் அமைந்தால் கரூரை மையமாகக் கொண்ட ஜவுளித் தொழில் விரிவடையும். மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அமைய வேண்டும்; பரந்தூர் போன்ற பாதிப்பு ஏற்படக் கூடாது.

கரூரில் முக்கிய பிரச்சினையாக மணல் கொள்ளை உள்ளது. அது தீராத தலைவலியாக உள்ளது. கரூர் வறண்ட மாவட்டமாக மணல் கொள்ளையால் மாற்றப்பட்டுள்ளது. சட்டவிரோத கல் குவாரிகள் கரூரை அழித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான காரணம் யார் முதல்வரே? 2026 தேர்தலில் மணல் கொள்ளை பணத்தை வைத்து தமிழக மக்களை விலைக்கு விடலாம் என கனவு காண்பவர்களிடத்தில் இருந்து காவிரி தாய்க்கும், கரூருக்கும் விடுதலை வேண்டுமா? வேண்டாமா? நிச்சயம் கிடைக்கும், கவலை வேண்டாம்.

தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரி கரூரில் அமைந்த பஞ்சப்பட்டி ஏரி. அதன் பரப்பு ஆயிரம் ஏக்கருக்கு மேல். அந்த ஏரி செழிப்பாக இருந்தால் விவசாயம் செழிக்கும்; பல லட்சம் குடும்பங்கள் வளம் காணும். அது சீரமைக்கப்படவில்லை; ஆட்சியாளர்கள் அதை மேற்கொள்ளவில்லை. உங்கள் ஆட்சி வந்ததும் பஞ்சப்பட்டி ஏரிக்கு உயிர் வரும்.

ஜவுளித் தொழில் கரூர் நகரை வளர்த்தெடுக்கிறது. இருந்தாலும் வெளியேறும் கழிவுகளை மக்கள் பாதிக்காத வகையில் அறிவியல் பூர்வமாக சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதுவரை ஆட்சியாளர்கள் அதை செய்யவில்லை. நாம் அதை செய்வோம்.

கரூரில் முக்கிய பிரச்சினையைப் பற்றி பேசாமல் போனால் நன்றாக இருக்காது. நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். கரூர் மாவட்டத்தில் மந்திரி ஒருவர் இருந்தார்; இப்போது அவர் மந்திரி இல்லை, ஆனாலும் மந்திரி மாதிரி. அவர் யார்? ‘பாட்டிலுக்கு பத்து ரூபா’ (என பாடல் பாடினார்).

அண்மையில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் முதல்வர் அந்த மாஜி மந்திரியை புகழ்ந்து பேசினார். இதே முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரூருக்கு வந்து என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். வீடியோ பார்த்தால் போதும். மக்கள் பேசுவது: “திமுக குடும்பத்துக்கு ஊழல் பணத்தை கொண்டு சேர்க்கும் பணியில், திமுகக்கு ஏடிஎம் ஆக மாஜி மந்திரி செயல்பட்டு வருகிறார்.”

இங்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா? உங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதா? இன்னும் ஆறு மாதம்தான். ஆட்சி மாறும். காட்சி மாறும். உண்மையான மக்கள் ஆட்சி அமையும்” என்று விஜய் பேசியார்.

Facebook Comments Box