பிற்பகலே நடந்த சம்பவம்.. நாமக்கல் அடித்த எச்சரிக்கை மணி.. சுதாரிக்காத விஜய்.. இத்தனை உயிர் போச்சே
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பலர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் கொஞ்சம் சுதாரித்து செயல்பட்டு இருந்தால் இது போன்ற கொடுமையான நிகழ்வுகளை தடுத்து இருக்கலாம்.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 40 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 31 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 6 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.
பலர் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படுவதால், கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூர் விரைந்துள்ளார்.
சம்பவ இடத்தில் ஐஜி, எஸ்.பி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரண்டு டிஐஜி-களையும் சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விஜய் சுதாரித்து இருக்கலாம்
கட்சியின் தலைவர் விஜய் கொஞ்சம் சுதாரித்து செயல்பட்டு இருந்தால் இது போன்ற கொடுமையான நிகழ்வுகளை தடுத்து இருக்கலாம். ஏற்கனவே நாமக்கல்லில் இன்று பிற்பகல் நடந்த கூட்டத்திலேயே பலர் காயம் அடைந்தனர். பெண்கள் பலருக்கு கால் முறிவு ஏற்பட்டது. பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
கடுமையான காயங்களுடன் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நாமக்கல்லில் நடந்த இந்த நிகழ்வு விஜய்க்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக இருக்கும். ஆனால் அதை மீறி கரூரில் கூட்டத்தை முறைப்படுத்த விஜய் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. பிற்பகல் நடந்த நிகழ்வை வைத்தே விஜய் சுதாரித்து இருக்கலாம்.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் விஜய் இப்படி வீக் எண்டு பயணம் செய்வது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா நடிகர் என்பதால் அவரை பார்க்க வருவது அதிகரித்து வருகிறது. விஜய் ரசிகர்களும், ரசிக மனோபத்தோடு செயல்படுவது, ஒழுக்கமின்றி செயல்படுவது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. விஜயும் ரசிகர்களின் செயலை கண்டிக்காமல், அரசுதான் தங்களை ஒடுக்குவதாக புகார் அளித்து வந்தார். ரசிகர்களை செயல்களை தடுக்க தவறியது இந்த மரணங்களுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
விரையும் ஸ்டாலின்
இதையடுத்து நாளை முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு விரைய உள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட போஸ்டில், “கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களையும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.