விஜய் பிரசாரம்.. மக்கள் உயிரிழப்பு.. இவ்வளவு அசால்ட்டா?.. அரசியலில் விழுந்த முதல் அடி.. கொதிக்கும் மக்கள்
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய்; தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்துவருகிறார். இந்தப் பயணத்துக்கு ‘உங்கள் விஜய் நா வரேன்’ என்று பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது. வாராவாரம் சனிக்கிழமைகளில் சந்திப்பை நிகழ்த்தும் அவர் இன்று கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தொண்டர்களை சந்தித்தார். அதில் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கிறது.
ரஜினி தனது ரசிகர்களை ஏமாற்றியது போல் ஏமாற்றாமல் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். கட்சியின் முதல் மாநாட்டிலேயே அரசியலில் தனது ஸ்டாண்ட் என்னவென்பதை தெளிவாக உணர்த்திவிட்டார். அவரது டார்கெட் முழுக்க முழுக்க திமுகவின் மீதுதான் இருக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தைரியமாக அட்டாக் செய்யும் அவர்; தனது பேச்சில் கொஞ்சம் நக்கலையும் ஊடுருவ விடுகிறார்.
அரசியல் சுற்றுப்பயணம்: முதல் மாநாட்டிலிருந்தே திமுக மீது அம்பு விடும் விஜய்க்கு திமுகவினரும் பதிலடியை கொடுக்கிறார்கள். அதில் தலையாயது, ‘ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்’. அவர் மக்களை சந்திக்க மறுக்கிறார் என்றெல்லாம் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் விஜய். வாராவாரம் சனிக்கிழமைகளில் கட்சியின் தொண்டர்களை சந்தித்து பேசுவதுதான் ஏற்பாடு.
இன்றைய பயணம்: சனிக்கிழமை வந்தாலே விஜய் வந்துவிடுவார் என்று மக்களிடமும் எண்ணம் விழ ஆரம்பித்துவிட்டது. இன்று அவர் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தனது பயணத்தை செய்தார். வழக்கம்போல் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததுதான். அதே வழக்கத்துடன் மின் கம்பிகள், மரங்களில் ஏறுவது. தவறான திசையில் வாகனங்களை வேகமாக இயக்கியது என தவெகவினர் அலும்பு செய்துகொண்டிருந்தார்கள். காவல் துறையினரும் தங்களால் முடிந்த அளவுக்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார்கள்.
31 பேர் மரணம்: சூழல் இப்படி இருக்க கரூரில் அவர் பேசியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மூன்று குழந்தைகளும் அடக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பெரிய ரத்த கறையை விஜய்யின் கரங்களில் அப்பிவிட்டிருக்கிறது. இதுவரை எந்த அரசியல் சுற்றுப்பயணத்திலும் இப்படி ஒரு துக்கம் நடந்ததில்லை; விஜய்க்கு ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் தகுதியே இல்லை என பலரும் கொந்தளிக்கிறார்கள்.
என்ன காரணம்?: நாமக்கல்லில் இன்று காலை 8.45 மணிக்கே விஜய் பேசுவதுதான் நிகழ்ச்சியின் திட்டம். ஆனால் விஜய்யோ 8.45 மணிக்குத்தான் சென்னையிலிருந்து கிளம்பவே செய்தார். அது தெரியாத மக்கள் காலையிலிருந்தே காத்திருக்க ஆரம்பித்தார்கள். விஜய் வந்ததோ பிற்பகல்தான். இதிலேயே பலரின் சத்துக்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டுவிட்டன. அதேபோல் கூட்டத்தை அதிகம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்ல, மற்ற சில மாவட்டங்களிலிருந்தும் பெண்களை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கூட்டத்தை சரியாக ஒழுங்குமுறை படுத்தாமல் இப்படிப்பட்ட செயலை தவெக மேலிடம் செய்திருக்கக்கூடாது. கூட்ட நெரிசல் ஏற்பட இதுவும் முக்கிய காரணம். இந்த அசம்பாவிதத்தில் 16 பெண்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படையிலேயே தவெக தொண்டர்கள் அரசியல்மயமாகி கூட்டத்துக்கு வரவில்லை; அவர்களை பொறுத்தவரை விஜய்யை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில்தான் காவல் துறை எந்த ஒழுங்குப்படுத்தினாலும் அவை அனைத்தையுமே மீறுகின்றன. ஒரு தலைவராக விஜய் இனியும் இதை கட்டுப்படுத்தாமல் அசால்ட்டாக இருந்தால், அரசியலில் ‘அ’னா எழுதுவதற்குள் அனாதையாகிவிடுவார் என்பதும் பெரும்பாலானோரின் கருத்தாக மாறியுள்ளது.