சொன்னது 10 ஆயிரம் பேர்.. வந்தது ஒரு லட்சம் பேர்! கரூர் நெரிசல் மரணத்திற்கு இது தான் காரணமா? ஆதாரம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு பத்தாயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் காவல் துறையில் அனுமதி கேட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், 20ஆம் தேதி நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் மக்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜயின் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 8.45 மணிக்கு நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகே பொதுக்கூட்டத்தில் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் திட்டமிட்ட நேரத்தில் வரவில்லை.
திட்டப்படி 8.45 மணிக்கே நிகழ்ச்சி தொடங்க வேண்டிய நிலையில், விஜய் அதே நேரத்தில் தான் சென்னை வீட்டிலிருந்து புறப்பட்டார். காலை 9.30 மணிக்குத் தான் அவர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து பேருந்தில் நாமக்கல் சென்ற விஜய், குறுகிய தூரத்தையும் கடக்க பல மணி நேரம் எடுத்துக் கொண்டார். இதனால், மதியம் 2.45 மணி வரை ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அங்கு காத்திருந்தனர். காலை முதலே வெயிலில் நிற்கும் நிலையில், பலர் உணவின்றி காத்திருந்ததால், பெண்கள் உள்பட சிலர் மயக்கம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் மக்களை சந்தித்த பின்னர், விஜய் மதியம் 3.45 மணியளவில் கரூர் நோக்கி புறப்பட்டார். ஆனால் வழியெங்கும் பெரும் கூட்டம் இருந்ததால், அவர் மாலை 6.30 மணிக்கே கரூரை அடைந்தார். அங்கு 100 அடி சாலையில் ஆயிரக்கணக்கானோர் விஜயை காண திரண்டிருந்தனர்.
இந்நிலையில், விஜயின் 60 அடி நீள பேருந்து கூட்டத்தின் நடுவே நுழைந்தபோது திடீர் நெரிசல் ஏற்பட்டது. அதனால் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து, கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை ஆபத்தாக இருப்பதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினரின் அலட்சியமே இந்த சோக சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 25ஆம் தேதியே விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், சாலை மார்க்கமாக கரூருக்கு வரும் விஜய் மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அளவீடு செய்யும் போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர அடி காலியிடமாக இருந்தது. இதில் 60 ஆயிரம் நபர்கள் வரை நின்று பார்வையிடலாம். ஆனால், பத்தாயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என கேட்டிருந்த நிலையில், எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.