கரூரில் விஜய் தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 36 பேர் பலி: நடந்தது என்ன? – முழுமையான தகவல்
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்றிரவு விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காவல்துறை காலை 10.30 மணிக்கு அனுமதி அளித்திருந்தாலும், விஜய் நாமக்கல்லில் நடைபெற்ற பிரச்சாரத்தை முடித்துவிட்டு பிற்பகல் 3 மணிக்குப் பிறகே கரூருக்குப் புறப்பட்டார்.
இந்நிலையில், மதியம் 12 மணி முதலே கரூர் வேலுசாமிபுரம் பகுதிக்கு தொண்டர்களும் ரசிகர்களும் பெருமளவில் திரண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், பிரச்சாரப் பேருந்து கரூர் எல்லைக்குள் நுழைந்தவுடன் மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதன் காரணமாக, இரவு 7.15 மணிக்குத்தான் விஜய் அங்கு வந்தார்.
விஜய் உரையாற்றத் தொடங்கியபோது, மைக்கில் சிக்கல் ஏற்பட்டது. அவரது பேச்சைக் கேட்க பின்புறம் இருந்த மக்கள் முன்னோக்கி தள்ளிச்சென்றனர். இதனால் முன்புறத்தில் இருந்தவர்கள் பெரும் நெரிசலில் சிக்கினர். கூட்டத்தில் சிக்கிய சிலர் மூச்சுத்திணறி மயங்கினர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததாலும் பலர் காயமடைந்தனர். விஜய் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வெளியேறிய பின்னரே மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் ஆம்புலன்ஸ்களில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கோவைச் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். இவர்களில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தீவிர நிலையில் உள்ளனர்.
மருத்துவமனைக்கு அருகே உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் உறவினர்கள் கூடி கதறியதால் சூழல் சோகமாக மாறியது.
விஜய் தலைகுனிந்தபடி சென்றார்: கரூரில் நெரிசல் விபத்து ஏற்பட்டதை அறிந்ததும், விஜய் பேச்சை சுருக்கமாக முடித்தார். பின்னர் திருச்சிக்கு புறப்பட்டார். அங்கு செய்தியாளர்கள், “கரூரில் உங்கள் பிரச்சாரத்தின்போது 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” எனக் கேட்டபோது, எந்த பதிலும் கூறாமல் தலை குனிந்து சென்றார்.
அரசின் நடவடிக்கை: சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து 50-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. நேற்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூருக்குச் சென்றார்.
இரங்கல்கள்: இந்தச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
நிவாரணம்: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். மேலும், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.