கரூர் கூட்ட நெரிசல்: ஒரே ஊரைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் மரணம்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, 5 சிறுமிகள், 5 சிறுவர்கள், 16 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் கரூர் அருகே உள்ள ஏமூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 2 மகள்கள் உட்பட உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஏமூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹேமலதா (28), மகள்கள் சாய் லக்ஷனா (9) மற்றும் சாய் ஜீவா (5) உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், ஏமூரை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சக்தியின் மனைவி பிரியா மற்றும் மகள் தரணிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழந்தோர் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. ஒரே ஊரைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.