“கரூர் துயரத்திற்கு விஜய்யும், அவரது கட்சியினரும்தான் காரணம்” – ஜவாஹிருல்லா கண்டனம்

கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு நடிகர் விஜய்யும், அவருடைய கட்சியினரும் முழு பொறுப்பேற்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் இன்று (ஞாயிறு) நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“சமீபத்தில் கரூரில் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. அப்போது மக்கள் ஒழுங்காகச் செயல்பட்டதால், எந்தச் சிறிய சிக்கலும், காயமும் இல்லாமல் அனைவரும் வீடு திரும்பினர்.

ஆனால், நடிகர் அரசியலுக்குள் வரும்போது, அவரது கூட்டத்தில் ரசிகர்களே திரளுகிறார்கள். அரசியல் பயிற்சியுடன் கூடிய தொண்டர்கள் வருவதில்லை. அதனால் தான் கரூரில் இத்தகைய துயரச் சம்பவம் ஏற்பட்டது.

இந்த விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று கூறுவது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. காவல்துறை மீது சுமத்தப்படுவது மிகப்பெரிய அநியாயம். உண்மையில், இந்தத் துயர சம்பவத்துக்கு விஜய்யும், அவரது கட்சியினருமே பொறுப்பாக இருக்கிறார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் உடனடியாக கரூருக்கு சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்

Facebook Comments Box