கரூர் கூட்ட நெரிசல் விபத்து – நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை தொடக்கம்
கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 உயிர்கள் பலியான சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சம்பவ இடத்துக்கு வந்த அவர், காவல்துறை அதிகாரிகளிடமும், அசம்பாவிதத்தை நேரில் கண்டவர்களிடமும் விளக்கங்களை கேட்டறிந்தார். விபத்து நடந்த இடம் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, வெளிநபர்கள் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது. அங்கு விழுந்து கிடந்த பொதுமக்களின் சொந்தப் பொருட்கள், கட்சிக் கொடிகள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சி நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா, எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர், தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனவா போன்ற பல கேள்விகளை அவர் எழுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் அவர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளார்.
இதற்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை செய்திருந்தார். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட அவரது அறிக்கையின் அடிப்படையில் அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது. இதேபோல கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்தும் விரைவில் அறிக்கை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.