விஜய் கூட்டத்தில் பாதுகாப்பு புறக்கணிப்பு – சி.பி.ஐ குற்றச்சாட்டு

சாலை வழிப் பரப்புரையில் திரளும் பொதுமக்களின் பாதுகாப்பை கணக்கில் கொள்ளாமல், தலைவர் விஜய்யின் தனிப்பட்ட பாதுகாப்பில் மட்டுமே கவனம் செலுத்தியது தமிழக வெற்றிக் கழகத்தின் மிகப்பெரிய தவறாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் நகரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய சாலைப் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் வழங்கவும், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 28-ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றது. அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்து, உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியது.

கரூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சிறப்பாக சேவை செய்ததையும், சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தையும் பார்வையிட்டதையும் அறிக்கை குறிப்பிடுகிறது. கூட்ட நெரிசலுக்கான முக்கிய காரணமாக விஜய் தாமதமாக வருதல் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு குடிநீர் வசதி இல்லாமை, வெளியேற முயன்றவர்களை தடுத்து நிறுத்தியது, சிறுவர்கள் மூச்சுத் திணறி விழுந்தபோது உடனடியாக சிகிச்சைக்குக் கொண்டு செல்ல இயலாதமை ஆகியவை அடுத்தடுத்த காரணங்களாக அமைந்ததாகக் கூறப்பட்டது.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் தலைவர் பாதுகாப்புக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் போல, பொதுமக்களின் பாதுகாப்பை கவனிக்காமல் இருந்தது தமிழக வெற்றிக் கழகத்தின் கடுமையான பிழையாகும் என சி.பி.ஐ வலியுறுத்தியுள்ளது. மேலும், காவல்துறை ஏற்பாடுகள் கூட்டத்தின் உண்மையான திரளுக்கு ஏற்ப அல்லாமல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த எண்ணிக்கையை மட்டுமே மையமாகக் கொண்டு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

அதே நேரத்தில், சம்பவம் நடந்த உடனடியாக அரசு விரைந்து செயல்பட்டது, முதல்வர் நேரடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தியது முன்னுதாரணமாகும் என்றும், இந்த நிலையில் அரசையும் ஆளும் கட்சியையும் குற்றம்சாட்டுவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றாக மறுக்கிறது என்றும், மீதமுள்ள விவரங்களை விசாரணை ஆணையம் முன் வைக்கப்படும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

Facebook Comments Box