கரூர் துயர சம்பவம் | “இது சதி அல்ல, அரசியல் செய்ய தேவையில்லை” – கனிமொழி

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்து, 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்த பிறகு, திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“கரூரில் நேற்று நடந்த நிகழ்வுக்கு 20 பேருக்கு ஒருவராக காவல்துறை பாதுகாப்பு வழங்கியது. இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன் தவெக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டதே. ஒரு அரசு நிகழ்ச்சிக்கு பிரதமர் அல்லது முதல்வர் சென்றால் அதன் பொறுப்பு அரசுக்கு தான். ஆனால் ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு சென்றால் அந்தக் கட்சியே பொறுப்பேற்க வேண்டும்.

அரசும் காவல்துறையும் வழங்கக்கூடியது பாதுகாப்புதான். ஆனால் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள், அவர்களுக்கு குடிநீர், உணவு போன்ற தேவைகளை ஏற்பாடு செய்வது கட்சியின் கடமை. ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ என்றில்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் காவல்துறை வழக்கமாக கட்டுப்பாடுகளை விதிக்கும். மக்கள் பாதுகாப்புக்காகவே அந்தக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்லும் சூழலில், தலைவரிடம் வாகனத்தை நிறுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தும். பொதுவாக தலைவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். காவல்துறை வழங்கும் அறிவுறுத்தல்களை அரசியல் தலைவர்கள் கடைபிடிப்பது அவசியம். தங்களைச் சந்திக்க வரும் மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டியது அரசியல் தலைவர்களின் பொறுப்பு.

எனக்கு யாரையும் குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதில் அரசியல் செய்யவும் விருப்பமில்லை. இந்தச் சம்பவத்தில் யாரும் சதி செய்யத் தேவையில்லை. எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அனைவரும் தமிழக மக்கள். தமிழக மக்களின் பாதுகாப்பு என்பது முதல்வரின் பொறுப்பு. மக்கள் மீது சதி செய்வது என்ற குற்றச்சாட்டுக்கு இடமே இல்லை. இதுபோன்ற தாழ்வான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை,” என்று கனிமொழி தெரிவித்தார்.

Facebook Comments Box