கரூர் துயரச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

“எந்த அரசியல் கட்சித் தலைவரும், அவர்களின் தொண்டர்களும், பொதுமக்களும் உயிரிழப்பதை விரும்புவதில்லை. எனவே, துயரமும் சோகமும் நிறைந்த இந்த சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமமான தகவல்கள், அவதூறு செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் 41 உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெளியிட்ட காணொளி உரையில் அவர் கூறியதாவது:

“கரூரில் நடந்தது மிகப்பெரிய துயரம். மருத்துவமனையில் நான் கண்ட காட்சிகள் மனதில் அழியாத வலியை ஏற்படுத்தியுள்ளன. செய்தி அறிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவுகளை வழங்கினேன். இருந்தும் வீட்டில் அமைதியாக இருக்க முடியாமல் அன்று இரவே கரூர் சென்றேன். குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை இழந்துள்ளோம். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளோம்.

இந்தச் சம்பவத்தின் உண்மை காரணங்களை கண்டறிய, முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உயிரிழந்தவர்கள் நம் தமிழ் உறவுகள் தான். எனவே, இந்தச் சூழலில் பொறுப்பற்ற பதிவுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதேபோல், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுஅமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள் பாதுகாப்பாக அமைய, தேவையான விதிமுறைகள் வகுக்கப்படும். விசாரணை ஆணைய அறிக்கைக்கு பின்னர், அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து நடைமுறைப்படுத்துவோம். மனித உயிர்களே உயர்ந்தது. அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அனைவரும் மக்கள் நலனுக்காகச் செயல்பட வேண்டும்.”

Facebook Comments Box