கரூர் விபத்து: “யாரையும் குறை சொல்ல வரவில்லை; மக்கள் சொன்னதை மத்திய அரசிடம் தெரிவிப்பேன்” – நிர்மலா சீதாராமன்
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்களையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், விபத்து நடந்த வேலுசாமிபுரத்திற்கும் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்தேன். அவர்களின் வலி, துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. வாழ்வாதாரமாக இருந்தவர்கள் உயிரிழந்ததால் அந்தக் குடும்பங்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட விபத்து இனி எங்கும் நடைபெறக் கூடாது.
காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் கூறியவற்றை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தெரிவிப்பேன். மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மட்டுமே வந்துள்ளேன். விசாரணை குறித்து எதையும் இப்போது சொல்ல முடியாது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பிரதமர் நேரில் வர இயலாத சூழலில் என்னையும், மத்திய இணையமைச்சர் எல்.முருகனையும் அனுப்பியுள்ளார். மக்களைச் சந்தித்தபோது, “குடிநீர், உணவு எதுவும் கிடைக்கவில்லை; காலை 12 மணி முதல் குழந்தைகளுடன் காத்திருந்தோம்; வெளியே வர இயலவில்லை; கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது; சிலர் கட்டிடங்கள், மின் கம்பங்களில் இருந்து விழுந்தனர்” எனக் கூறினார்கள்.
மக்கள் எங்களிடம் பகிர்ந்ததை மத்திய அரசிடம் சொல்வோம். மத்திய அரசின் சார்பில் வந்துள்ளேன். யாரையும் குற்றஞ்சாட்டவோ விமர்சிக்கவோ அல்ல,” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.