கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய ராகுல் காந்தி
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும், தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும், தனது சார்பில் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்குவதாக விஜய் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். சம்பவம் நடந்த விதம் குறித்து கேட்டறிந்தும், அவருடன் சுமார் 15 நிமிடங்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, விஜயின் நீலாங்கரை வீட்டிற்கு குண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததை அடுத்து போலீசார் அவரது இல்லத்தில் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் விஜய் தனது பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு மாற்றம் அடைந்தார். அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.