சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நவ. 27-க்குள் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலை, வருகிற நவம்பர் 27-க்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, வழக்கறிஞர் வி. ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த சங்கத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போதைக்கு சங்கம் மற்றும் கேண்டீன் தனி அதிகாரியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த சங்கத்துக்கான தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், லா அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய நிர்வாகிகளைக் கொண்ட குழுவை அமைத்து, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, தேர்தல் அதிகாரியூடாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

ஆனால் அந்த குழுவில் உள்ள வழக்கறிஞர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்த பிறகும், தேர்தல் இதுவரை நடக்கவில்லை. இதையடுத்து, வழக்கறிஞர் வி. ஆனந்த் மீண்டும் மனு தாக்கல் செய்தார். வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜராகிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணனும், அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கீதா தாமரை செல்வனும் வாதித்தனர். இதன்பின் நீதிபதி உத்தரவிட்டார்:

  • குழுவில் உள்ள வழக்கறிஞர்கள் ஜி. மோகனகிருஷ்ணன், வி.ஆர். கமலநாதன், டி.வி. கிருஷ்ணகுமார், வி. நளினி ஆகியோர் வாக்காளர் பட்டியலை தனி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தனி அதிகாரி அந்த பட்டியலை அக்டோபர் 25-க்குள் சரிபார்த்து, தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
  • தேர்தல் அதிகாரி, நவம்பர் 27-க்குள் சங்கத்துக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
Facebook Comments Box