கரூர் தவெக கூட்டத்தில் நெரிசலுக்கு முன் நடந்தது என்ன? – தமிழக அரசின் புதிய விளக்கம்

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தமிழக அரசு தரப்பில் அதிகாரிகள் புதிய விளக்கத்தை வழங்கினர்.

அமுதா ஐஏஎஸ், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பில் வீடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

  • தவெக தரப்பிலிருந்து 7 இடங்கள் கூட்டத்துக்காக கோரப்பட்டன. அவற்றில், கால்வாய் மற்றும் பெட்ரோல் பங்க் இருந்ததால் ஒரு இடம் ஒதுக்கப்படவில்லை. வேலுசாமிபுரம் மட்டும் ஏற்றதாக கருதி ஒதுக்கப்பட்டது.
  • மனுவில், 10,000 பேர் மட்டுமே பங்கேற்பர் என தவெக குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் அதிகமான மக்கள் வரலாம் எனக் கருதி, வேலுசாமிபுரம் தேர்வு செய்யப்பட்டது.
  • பாதுகாப்பு விதிமுறையின்படி 50 பேருக்கு ஒரு போலீஸ் என்பதால், 10,000 பேருக்கு 500 போலீஸார் பந்தோபஸ்தில் ஈடுபட்டனர்.
  • கூட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதாகக் கூறப்படுவது தவறு. விஜய்யின் வாகனம் வரும்போதோ அல்லது ஆம்புலன்ஸ் வந்தபோதோ கூட்டத்தை போலீஸார் ஒழுங்குபடுத்தினர்.
  • கூட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. தவெகவினர் அமைத்திருந்த ஜெனரேட்டர் அறைக்குள் கூட்டம் நுழைந்ததால் ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டது. ஆனால், பிற இடங்களில் மின்விநியோகம் சீராக இருந்தது. இதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன.
  • பாதுகாப்புக்காக முன்பே மின் தடையை கோரியிருந்தாலும், மின்வாரியம் அதனை நிராகரித்துவிட்டது.
  • ஆம்புலன்ஸ் விஷயம் குறித்தும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. விஜய்யின் வாகனத்தோடு 2 ஆம்புலன்ஸ் வந்தது. தவெக மற்றும் அரசு தரப்பிலும் தனித்தனியாக ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்தன. மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தகவல் வந்தபின் மட்டுமே ஆம்புலன்ஸ் கூட்டத்துக்குள் அனுப்பப்பட்டது.

இதன் மூலம், இடம் ஒதுக்கீடு முதல் மின்சார தடை, ஆம்புலன்ஸ் இயக்கம், தடியடி குற்றச்சாட்டு என எல்லாவற்றுக்கும் அரசுத் தரப்பில் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box