கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றாவிட்டால் அதிமுக வழக்கில் சட்ட நடவடிக்கை: இன்பதுரை எம்.பி தகவல்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவ வழக்கை சிபிஐ-க்கு மாற்றவில்லை என்றால், அதிமுக சார்பில் நீதிமன்ற வழியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும் கட்சி வழக்கறிஞர் அணியின் செயலருமான இன்பதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் விவசாய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த இன்பதுரை, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு திட்டம் தொடங்கியதற்குப் பிறகும் தண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை. பல இடங்களில் ஷட்டர்கள் பழுதடைந்துள்ளன, பாலங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம்.
ராதாபுரம் தொகுதியில் குவாரிகளின் செயல்பாடு நிர்வாகமின்றி நடைபெறுகிறது. குளங்களில் தண்ணீர் இருக்கக் கூடாததால், அந்த பகுதிக்கு சொந்தமானவர்கள் தண்ணீர் வரவிடாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு மற்றும் காவல் துறையின் மீது பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதனால் சிபிஐ வழக்கை கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வேலுசாமிபுரத்தில் கூட்டம் நடத்துவதற்கு உரிய இடமில்லை என்பதற்காக, கடந்த ஜனவரி மாதம் காவல் ஆய்வாளர் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்தார். ஆனால் செப்டம்பர் மாதம் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது கேள்வியாகும்.
அல்லு அர்ஜுன் சம்பவத்தைப் போல விஜயை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கூறப்படுவதுண்டு. ஆனால் அல்லு அர்ஜுன் சம்பவம் வேறு; விஜய் சம்பவம் வேறு. அல்லு அர்ஜுன் அனுமதியில்லாத இடத்தில் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக கைது செய்யப்பட்டார், ஆனால் விஜய் அனுமதி பெற்றிருந்தார். சம்பவ நேரத்தில் அவர் அந்த இடத்தில் இல்லாதது காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை என்றால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை? பல டிஜிபிக்கள் இருப்பதால், காவல் துறையினர் பல இடங்களில் இருந்து உத்தரவுகளை பின்பற்றுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், காவல் துறையில் நல்ல அதிகாரிகள் உள்ளனர்.
அதிமுக ஆட்சியில் ஒரே நாளில் காஞ்சிபுரம் அத்திவரதர் நிகழ்வில் 2 லட்சம் பேருக்கு பாதுகாப்பு அளித்து எந்த பாதிப்பும் இல்லாமல் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தில் அரசியல் சதி தெளிவாகக் காணப்படுகிறது. அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்காவிட்டால், நீதிமன்ற விடுமுறை முடிந்த பிறகு, அதிமுக பொதுச் செயலாளருடன் ஆலோசித்து நீதிமன்ற வழியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இன்பதுரை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலர் தச்சை கணேசராஜா மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.