அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி? – தமிழக அரசு அதிகாரிகள் அமுதா, செந்தில்குமார் விளக்கம்
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அதிக அளவில் ஆம்புலன்ஸ்கள் எவ்வாறு வந்தன என்பது தொடர்பாக, தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அமுதா மற்றும் சுகாதாரத் துறைச் செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் வீடியோ ஆதாரங்களுடன் விளக்கமளித்தனர்.
செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, தலைமைச்செயலகத்தில் ஊடகச் செயலர் பி.அமுதா, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சுகாதாரத் துறைச் செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் சந்தித்து, சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளைக் காட்டி விவரித்தனர்.
அமுதா கூறியதாவது: *“கரூர் நிகழ்வைச் சுற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுகின்றன. மதியம் 3 மணி வரை சுமார் 10,000 பேர் இருந்தனர். விஜய் வந்ததும், கூட்டம் அதிகரித்து சுமார் 25 ஆயிரம் பேர் வரை கூடியிருக்கலாம். அவரது வாகனத்தின் பின்னால் நூற்றுக்கணக்கானோர் வந்தனர். நீண்ட நேரம் காத்திருந்ததால் பலருக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டது. நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு இரவு 7.40 மணி முதல் 9.45 மணி வரை பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மின்சாரம் நிறுத்தப்பட்டது என்ற தகவல் தவறானது. மின் விநியோகம் தடையின்றி நடந்தது. ஆனால் கூட்டம் ஜெனரேட்டர் அறைக்குள் தள்ளிச் சென்றதால், அங்கு இயந்திரம் நிறுத்தப்பட்டது. அதனால்தான் போகஸ் லைட் எரியவில்லை. கரூர் சம்பவம் தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சீனியர் எஸ்.பி தலைமையில் போலீஸ் விசாரணையும் நடக்கிறது”* என்றார்.
கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில்: *“கரூர் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லி அனுமதி கேட்டிருந்தனர். வழக்கமாக 50 பேருக்கு ஒரு காவலர் நியமிக்கப்படும். ஆனால் விஜயின் முந்தைய கூட்ட அனுபவத்தின் அடிப்படையில், 20 பேருக்கு ஒரு காவலர் என்ற விகிதத்தில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
போலீஸார் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், விஜயின் கார் நின்றவுடன் பின்பக்கம் கூட்டம் முன்பக்கம் தள்ளிச் செல்ல முயன்றது. அதனைத் தடுக்கவே போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். கூட்டம் அதிகரித்ததால் கூடுதல் போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர்”* என்றார்.
சுகாதாரத் துறைச் செயலர் செந்தில்குமார் விளக்குகையில்: *“திடீரென அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. நெரிசல் சம்பவம் இரவு 7.14 மணிக்கு 108 கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. 7.20 மணிக்கு முதல் ஆம்புலன்ஸ் வந்தது. தொடர்ந்து 7.23 மணிக்கு மற்றொரு ஆம்புலன்ஸ் வந்தது. தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் அருகிலிருந்த மாவட்டங்களில் இருந்தும் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன. தவெக கட்சி சார்பில் 7, 108 அரசு ஆம்புலன்ஸ் 6, மற்ற மாவட்டங்களில் இருந்து 33 ஆம்புலன்ஸ்கள் வந்து சேர்ந்தன.
பிரேதப் பரிசோதனை அவசரமாக நடந்தது என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அதிக உயிரிழப்புகள் நேர்ந்த சூழலில், குடும்பங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டாமென்பதற்காக நல்லெண்ணத்தின் அடிப்படையில் பரிசோதனை விரைவாக முடிக்கப்பட்டது”* என்றார்.
இந்நிகழ்வின்போது உள்துறைச் செயலர் தீரஜ்குமார் மற்றும் டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமனும் உடனிருந்தனர்.