தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு – சர்ச்சைக்குரிய கருத்துக்காக நடவடிக்கை
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சை கிளப்பும் கருத்து ஒன்றை வெளியிட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
“சாலையில் நடந்தாலே தடியடி, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது. இவ்வாறு ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகள் போல காவல்துறை செயல்பட்டால், இளைஞர்களின் புரட்சித்தான் ஒரே வழி. இலங்கை, நேபாளம் போன்ற இடங்களில் இளைஞர்கள் மற்றும் ஜென்-ஸீ தலைமுறை ஒன்றாக அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கியது போல், இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம் மற்றும் அரசுப் பயங்கரவாதத்துக்கான முடிவுரையாக இருக்கும். பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை வெளியிட்ட சில நேரத்திற்குள் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கினார். ஆனால், சமூக வலைதளங்களில் பதிவின் காட்சி பரவியது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர், கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக, ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.