எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: பணி பாதுகாப்பு கோரும் அரசியல் கட்சி தலைவர்கள்
எண்ணூர் அனல்மின் நிலைய கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்சூர் அருகே எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் சாரம் சரிந்து விழுந்த விபத்தில், வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதன் பின்னர் கட்சி தலைவர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு முறையான பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமதாஸ்: “எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பங்களுக்கு அதிக நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்: அனல்மின் நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அவசியம். வட மாநில இளைஞர்கள் தமிழகத்தில் பணிபுரியும் போது அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவு கூடாது.
அன்புமணி: கட்டுமானப் பணிகளில் காட்டப்பட்ட அலட்சியம் இந்த விபத்துக்குக் காரணம். விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் மற்றும் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.