இடுக்கியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இடுக்கி கட்டப்பனையில் உள்ள உணவகத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், மைக்கேல் என அழைக்கப்படும் செல்வன், சுந்தரபாண்டியன் ஆகியோர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றனர். முதலில் சென்ற மைக்கேல் திரும்ப வராததால், ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே இறங்கியபோது மயக்கம் அடைந்தார். பின்னர் சுந்தரபாண்டியனும் இறங்கி மயங்கினார்.

மூவரும் உடனடியாக கட்டப்பனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ்-இல் வெளியிட்ட பதிவில், “கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 தமிழர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தது மிகுந்த துயரமளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலக்குழி விபத்துகளில் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பது எப்போது நிற்கும்? தூய்மைப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்; அவர்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box