‘செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ – கரூர் நெரிசல் விவகாரத்தில் அதிமுக கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி தொடர்ந்து பதற்றமாகச் செயல்படுவது குறித்து அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அதிமுக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தி:
“கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்ததாக திமுக அரசு அறிவித்ததும், தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தி வருகின்றனர். மின்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி, டிஜிபி, முதல்வர், வருவாய்ச் செயலாளர், மருத்துவத் துறைச் செயலாளர் என பலர் தொடர்ச்சியாக விளக்கமளித்து வருகிறார்கள். இப்போது செந்தில் பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார்.
இவ்வளவு பதற்றப்படுவதன் காரணம் என்ன? உண்மையில் என்ன நடந்தது என்பதில் சந்தேகம் அதிகரிக்கிறது. விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், அதனை சார்ந்த விவரங்களை அரசு அதிகாரிகள் பொதுவெளியில் பகிர்ந்திருப்பது, ஆணையத்தின் பணிகளை பாதிப்பதுடன், நீதிமன்ற அவமதிப்புக்கும் சமமானது.
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டன. 8000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் ‘Senthil Balaji Model Institutionalised Robbery’ எனப்படும் நிறுவனமயமாக்கப்பட்ட கொள்ளை நடக்கிறது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதற்கே ‘வெளிப்படையாகச் சொல்கிறேன்’ என செந்தில் பாலாஜி தன்னை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது.
ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுத்த ‘பத்து ரூபாய்’ பிரச்சாரத்தால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. அப்போது மவுனமாக இருந்த செந்தில் பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியான பின்னர் இதைப் பேசுவதே திமுக அரசின் அலட்சியத்தையும், அதை மறைக்கும் அரசியலையும் காட்டுகிறது.
மேலும், முன்பு “காசு வாங்கினேன், திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்று சொல்லித் தான் அமலாக்கத்துறையினரின் விசாரணையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றீர்கள். இப்போது மீண்டும் அதே போக்கில் பேசுகிறீர்கள். அடுத்த முறை சிபிஐ விசாரணை வந்தால், அமைச்சர் அன்பில் மகேஷின் முறையையே பின்பற்றப்போகிறீர்களா?” என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.