வற்றாத கண்ணீர்… வடியாத சோகம்..! – அத்தனை கட்சிகளுமே அரசியல் ஆதாயம் தேடும் அவலம்!
41 உயிர்களை பறித்த தேசிய துயரம், சில அரசியல் கட்சிகளால் ஆதாயம் தேடும் நோக்கில் திசை மாறி அரசியலாக்கப்பட்டு வருவது பெரும் வேதனையாக உள்ளது. கரூர் சம்பவத்தில் தார்மிக பொறுப்பு ஏற்று மக்களின் துயரத்தை போக்க வேண்டிய தவெக, சதி என்ற குற்றச்சாட்டை ஆளும் கட்சி மீது சுமத்தி தப்பிக்க முயல்கிறது. இதன் மூலம் தங்களுக்கு சம்பந்தமில்லை, அனைத்துக்கும் காரணம் திமுக தான் எனக் காட்டி அரசியல் அனுதாபம் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது தவெக.
அதேவேளை, தங்களை விமர்சித்து வரும் விஜய்க்கு பதிலடி கொடுக்க காத்திருந்த திமுக, சம்பவம் அரசியல் அனுதாபம் தேடப்படாமல் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதல்வர் நள்ளிரவே கரூருக்கு சென்று அவசியமான பணிகளை மேற்கொண்டார். ஆனால் அதை அரசியல் அக்கறை என்றே சிலர் விமர்சித்தனர்.
மேலும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோருக்கு மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க, விஜய்யை புறக்கணித்ததும் அரசியல் நோக்கத்துடன் நடந்தது என குற்றச்சாட்டுகள் எழுகின்றன. விஜய் மீது நடவடிக்கை எடுப்பது மக்கள் மனதில் எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும் என்பதால் அதனை தவிர்க்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
திமுகக்கு எதிராக அதிமுக – பாஜக கூட்டணியும் அரசியல் லாபம் பார்க்க முனைகிறது. கள்ளக்குறிச்சி விஷச் சாராயச் சம்பவத்தில் குழுவை அனுப்பாத பாஜக, கரூருக்கு அனுப்புகிறது. பழனிசாமி மற்றும் அண்ணாமலை விஜய்யின் பக்கம் நிற்பதுபோல் பேசி, பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்றனர். தவெக சதி நடந்ததாக கூறி சிபிஐ விசாரணை கோர, அதனை அதிமுக – பாஜக இணைந்து ஒத்துழைக்கின்றன.
சிபிஐ விசாரணை நடந்தால் அதன் முடிவுகளை வைத்து விஜய்யின் மீது அரசியல் அழுத்தம் கொடுக்க பாஜக தயங்காது என்றும் சிலர் எச்சரிக்கின்றனர்.
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில்:
“திமுகக்கும் குறை சொல்லாமல், விஜய்யையும் சமாதானப்படுத்தும் விதமாக பாஜக செயல் படுகிறது. திமுக, விஜய்யின் அரசியல் பயணத்தை நிறுத்த நினைக்கிறது. இழந்த செல்வாக்கை மீட்க அதிமுக பாடுபடுகிறது. மொத்தத்தில், அனைத்துக் கட்சிகளுமே கரூர் துயரத்தை வைத்து அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றன” என்றார்.
எது எப்படியிருந்தாலும், கரூரில் உயிரிழந்த 41 பேரின் துயரம் 2026 தேர்தல் வரை அரசியலின் கருவியாக மாறக்கூடும் என்பது தெரிகிறது.