கரூர் சம்பவம்: “சில கட்சிகள் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன” – செல்வப்பெருந்தகை
கரூர் சம்பவத்தை சில கட்சிகளும், சில அரசியல் தலைவர்களும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இது அரசியல் தவறு என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஊட்டியில் தெரிவித்துள்ளார்.
‘வாக்கு திருட்டுக்கு’ எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 கோடி கையெழுத்துகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி கையெழுத்துகளை பெற்று குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஊட்டியில் நடந்த கையெழுத்து இயக்கத்தை செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
- “திருமாவளவன் கூறியபடி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் குழு கரூருக்கு அனுப்பப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், பாஜக அமைத்த குழு உண்மையை ஆராய்வதற்காக அல்ல, குழப்பம் ஏற்படுத்துவதற்காக தான்,” என்றார்.
- “தமிழக அரசு ஏற்கனவே நீதிபதி அருணா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அந்த ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கிறது. அதன் முடிவை காத்திருக்க வேண்டும். ஆனால், ஹேமா மாலினி தலைமையில் வந்த குழு அரசியல் செய்வதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தவுடன் அரசியல் பேச ஆரம்பித்துவிட்டனர்,” எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும்,
- “கரூர் மாவட்டம் பற்றி கூடத் தெரியாத ஹேமா மாலினி, அனுராக் தாக்கூர் போன்றோர் வந்து திமுக மீதும், காவல்துறையினர்மீதும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் காவல்துறை சிறந்த முறையில் செயல்பட்டது. அதற்கு வீடியோ ஆதாரங்களும் உள்ளன. காவல்துறை வீரத்தோடு, தியாக மனப்பான்மையோடு செயல்பட்டது,” என்றார்.
“பாஜக பிணத்தின் மீது அரசியல் செய்யக் கூடாது. இப்படி பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளை மக்கள் வெறுக்கின்றனர். வாக்கு திருட்டு ஒரு பக்கம், பிணத்தின் மீது அரசியல் மற்றொரு பக்கம் – இவை இரண்டும் தவறு. இன்னும் துயரத்தின் ஈரம் வடியவில்லை. அதற்குள் அரசியல் பேசுவது கொடுமை. அவர்களின் வீட்டில் இதுபோல் நடந்தால், அரசியல் செய்வார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் குறித்து அவர்,
- “சம்பவம் நடந்தவுடன் உடனடியாக ஆணையம் அமைத்து, விமானத்தில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார். அமைச்சர்களை மட்டும் அனுப்பிவைக்காமல் நேரடியாகச் சென்றார். இதற்கு மக்கள் பாராட்டுகின்றனர். முதல்வரை பாராட்ட மனம் இல்லையென்றால், குறைந்தது அமைதியாக இருந்தால் போதும்,” என்றார்.
அதேவேளை,
- “ஹேமா மாலினி குழுவை அமைப்பது போல, கும்பமேளாவில் நடந்த விபத்தில் ஏன் குழு அமைக்கப்படவில்லை? மணிப்பூரில் நடந்த படுகொலைகள், வன்கொடுமைகளுக்கு ஏன் உண்மை கண்டறியும் குழு அனுப்பப்படவில்லை? இப்போது மட்டும் பிணத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய விழைகின்றனர். இது அரசியல் பிழை,” எனக் கடுமையாக விமர்சித்தார்.
அவர் தொடர்ந்து,
- “ஜிஎஸ்டி வசூலில் தமிழகமே அதிகம் பங்களிக்கிறது. இருந்தும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு குறைவான தொகையையே விடுவிக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது. ஜிடிபியிலும் ஒன்றிய அரசை விட முன்னிலையில் உள்ளது. ஆனால் வரி பணத்தை எடுத்து பிற மாநிலங்களுக்கு வழங்குகின்றனர். இது நியாயம் அல்ல,” என்றார்.
இந்நிகழ்வில் ஊட்டி எம்எல்ஏ ஆர். கணேஷ், மாநிலச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.