வானிலை முன்னறிவிப்பு: சென்னை, காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை சாத்தியம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாள்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 4 முதல் 9 வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக நாளை (அக்.4) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், அக்டோபர் 5 அன்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்று முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், சென்னை அடையாறு, வேளச்சேரி, மாதவரம், விமான நிலையம், கொரட்டூர், ஆலந்தூர், காசிமேடு, தண்டையார் பேட்டை, அயப்பாக்கம், திருவள்ளூர் ஆவடி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், மதுரை தானியமங்களம், கள்ளந்திரி, செங்கல்பட்டு செய்யூர், திருவள்ளூர் பூண்டி, ராணிப்பேட்டை ஆற்காடு பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.