நாமக்கல் பிரச்சாரம் 3-வது முறையாக ஒத்திவைப்பு: காவல் அனுமதி மறுப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம், மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி, பிரச்சாரம் அக்.8-ம் தேதி மற்றும் 9-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தின்கீழ், சட்டப்பேரவை தொகுதிகளைக் கடந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 19, 20, 21 ஆகிய நாட்களில் நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்தது. செப்.19-ம் தேதியில் ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. ஆனால் செப்.20, 21-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.
இதனால், அக்.4, 5-ம் தேதிக்கு பிரச்சாரம் மாற்றப்பட்டது. பின்னர் திடீரென அக்.5, 6-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அக்.5-ம் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தொகுதிகளில், அக்.6-ம் தேதி நாமக்கல் மற்றும் பரமத்தி-வேலூர் தொகுதிகளில் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஓத்திவைப்புக்கான காரணம்: அக்.5, 6-ம் தேதி பிரச்சாரம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 4 இடங்கள் மாநில நெடுஞ்சாலைக்குள் உள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை முன்னிட்டு, நாமக்கல் காவல் துறை அனுமதி வழங்கவில்லை. எனவே, மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்று இடங்களைத் தேர்வு செய்து பிரச்சாரம் நடத்த உள்ளனர்.
அதிமுகவினர் அதிருப்தி: எடப்பாடி பழனிசாமியின் வருகையை முன்னிட்டு நாமக்கல் மாநகரில் ப்ளெக்ஸ் பேனர்கள், வரவேற்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது முறையாக பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுவதால், அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.