ஸ்டாலினுக்கு பாராட்டு, இபிஎஸ் மீது சாடல், பாஜகவால் வருத்தம்… – தினகரன் கூர்மையான பேச்சு!
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கரூர் நிகழ்வை குறித்து கருத்து தெரிவிக்கும் போது, முதல்வர் ஸ்டாலினின் நிதானத்துக்கு பாராட்டு தெரிவித்ததுடன், இபிஎஸ் மற்றும் பாஜக மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.
கரூர் நிகழ்வை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறினார்:
“கரூரில் நடந்தது ஒரு விபத்துதான். தவெக நிர்வாகிகளுக்கு போதிய அனுபவம் இல்லை. அவர்கள் வேண்டுமென்றே எதையும் செய்திருக்க வாய்ப்பில்லை. எந்த தலைவரும் சொந்தக் கட்சித் தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்ற முதல்வரின் கருத்து சரிதான். அவர் யதார்த்தத்தை கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று இருந்தால், நீதிமன்றம் கூட இவ்வளவு கண்டனம் தெரிவித்திருக்காது. உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட, இச்சம்பவத்தை நிதானமாக கையாள்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, பதவி வெறியில் எந்த விஷயத்தையும் அரசியலாக்குகிறார். ‘ஆடு நனையுதேனு ஓநாய் அழுவது’ போல தவெகவுக்காக வக்கீல் போல் பேசுகிறார். இந்த முறை எடப்பாடியை வீழ்த்தாமல் அமமுக ஓயாது,” என்றார்.
தொடர்ந்து, அவர் பாஜக குறித்து கூறியதாவது:
“கரூர் சம்பவத்துக்காக பாஜக குழு அனுப்பியது வருத்தமளிக்கிறது. தூத்துக்குடி போன்ற சம்பவங்களில் குழு அனுப்பாத பாஜக, இங்கே மட்டும் அனுப்பியது ஏன்? இதுவே இரட்டை நிலைப்பாடு,” என்றார்.
முதல்வர் ஸ்டாலின் குறித்து தினகரன் கூறியதாவது:
“கரூர் சம்பவத்தில் முதல்வரின் நடவடிக்கை மிக நிதானமாக இருந்தது. அது அவரின் நீண்ட அரசியல் அனுபவத்தை காட்டுகிறது. அவரின் பேச்சில் பொறுப்புணர்வு இருக்கிறது, பழிவாங்கும் எண்ணம் இல்லை. கரூர் துயர் சம்பவத்தில் அவர் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். நான் இந்த ஆட்சிக்கு ஆதரவாக பேசவில்லை — ஆனால் முதல்வரின் அணுகுமுறை பாராட்டத்தக்கது,” என்றார்.
இதேவேளை, அண்ணாமலை மற்றும் எச்.ராஜாவின் கருத்துகள் குறித்து அவர்,
“அண்ணாமலையின் பேச்சு எனக்கு வருத்தமளிக்கிறது; இதுபற்றி அவரிடம் பேசவேண்டும். எச்.ராஜாவின் பேச்சும் சரியில்லை,” எனக் குறிப்பிட்டார்.
மொத்தத்தில், தினகரன் கரூர் சம்பவத்தை அரசியலாக்காமல் தார்மிக பொறுப்புடன் அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.