“வீட்டுக்குள் முடங்கியிருப்பது விஜய்க்கு ஏற்றதல்ல; கைதுக்கு அஞ்சினால் அரசியல் முடியாது” – கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கைதுக்குப் பயந்து அரசியல் செய்ய முடியாது என்றும், விஜய் இந்நேரம் வெளியில் வந்து தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“பொதுவாக ஒருநபர் ஆணையங்கள் ஆளும் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதே வழக்கம். கரூரில் 41 பேர் உயிரிழந்தது மிகுந்த துயரமான சம்பவம். இதற்காக அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம் அல்லது சிறப்பு புலனாய்வு குழு உண்மையை வெளிக்கொணராது என நான் கருதுகிறேன். அஸ்ரா கார்க் நேர்மையானவர் என்றாலும், அவர் தமிழக அரசு அல்லது காவல்துறைக்கு எதிராக அறிக்கை அளிப்பார் என நம்ப முடியாது.

கரூர் நிகழ்வை நடுநிலையாக விசாரிக்க நான்கு நீதிபதிகளைக் கொண்ட குழு அமைத்தால் நல்லது. இந்த விவகாரத்தின் மூலம் விஜய்யை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும், அவரை தேர்தல் பாதையில் இருந்து தள்ளவும் சிலர் முயற்சிக்கிறார்கள்.

விஜய் வீட்டுக்குள் முடங்கியிருப்பது சரியல்ல. காவல்துறை கைதுக்குப் பயந்தால் அரசியல் செய்ய முடியாது. கைது செய்தால் 15 நாள் அல்லது ஒரு மாதம் சிறையில் வைப்பார்கள் – அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தவெகவினர் வீட்டுக்குள் தஞ்சமடைந்து இருப்பது பொதுவாழ்வுக்கு நல்லதல்ல. தைரியத்தோடு வெளியே வந்தால்தான் அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும். இடைவெளி ஏற்பட்டுவிட்டால் அதை நிரப்புவது கடினம்.

அரசியலில் தொடர்ந்திருக்க வேண்டுமெனில் தவெகவினர் கதவுகளைத் திறந்து வெளியில் வர வேண்டும். கரூர் துயரச்சம்பவத்துக்குப் பின் விஜய் உடனே ஏன் வெளியேறினார் என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது முறையானது அல்ல.

கரூர் சம்பவத்தில் யார் தவறு செய்தார்கள் என்பதை தெளிவாக கண்டறிய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாது. இதில் காவல்துறை மீதும் விஜய் மீதும் பொது குற்றச்சாட்டு செய்வது சரியல்ல,” என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Facebook Comments Box