அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் — முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், 2024–25ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015 படி, மிகை ஊதியம் பெறும் சம்பள உச்சவரம்பு ரூ.21,000 என்றும், மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கும் விதம் பின்வருமாறு:
- லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்கள் – ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் + 11.67% கருணைத் தொகை = மொத்தம் 20% வரை போனஸ் வழங்கப்படும்.
- தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (Aavin) ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய பணியாளர்களுக்கும் இதே 20% அளவில் போனஸ் வழங்கப்படும்.
- லாபமில்லா பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் + 1.67% கருணைத் தொகை = மொத்தம் 10% வழங்கப்படும்.
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் + 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் வழங்கப்படும்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிகமாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.
இதன் மூலம் நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவர். மொத்தமாக, 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376.01 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
மேலும், பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான தனித் தீர்மானங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசு முடிவு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மேலும் உற்சாகத்துடன் செயல்படவும், வரவிருக்கும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகுக்கும் எனவும் அறிவிப்பு தெரிவிக்கிறது.