“இனி ஒரு தலைவராக செயல்பட வேண்டும்” – விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி அறிவுரை
“கரூர் சம்பவத்தைப் பற்றி இப்போது பின்னால் இருந்து அறிவுரை கூற முடியாது. ஆனால், இனி ஒரு தலைவராக செய்ய வேண்டியதை அவர் செய்ய வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய்க்கு மநீம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி அறிவுறுத்தியுள்ளார்.
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கமல்ஹாசன் இன்று கரூர் சென்றார். அங்கு, சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், தவெகவினர் அனுமதி பெற்றிருந்த லைட்ஹவுஸ் முனை மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்களை பார்வையிட்டார்.
பின்னர் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், 2 வயது சிறுவன் துரு விஷ்ணுவின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள காசோலையையும் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:
“இந்த சம்பவத்தில் யாரையும் நேரடியாக குற்றம் சாட்ட முடியாது. இதில் அனைவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. நீங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதால் சில உண்மைகள் வெளிப்பட, நீதி கிடைக்க வழிவகை ஏற்பட்டது.
சம்பவம் நடந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான நடவடிக்கை எடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் ஏன் வந்தார், எப்படி வந்தார் என்று கேட்க வேண்டியதில்லை. இது அவரது ஊர், அவரது மக்கள் — அவர் வராமல் வேறு யார் வருவார்? உயிர்சேதம் மேலும் அதிகரிக்காமல் தடுத்தவர் அவர் தான்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது, எனவே அதுகுறித்து கருத்து சொல்லுவது சரியல்ல. முதல்வர் மிகச் சிறந்த தலைமை பண்புடன் நடந்துகொண்டது பாராட்டத்தக்கது. இனிமேல் இத்தகைய விபத்துகள் நிகழாதவாறு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
நான் பேசுவது மனிதாபிமானத்தின் அடிப்படையில். எதிர்க்கட்சிகள் பேசுவது அரசியலாக இருக்கலாம், ஆனால் இப்போது அதற்கு நேரமில்லை. எவ்வளவு நிதி உதவி வழங்கினாலும், உயிர் திரும்பாது. எனவே, பணம் கொடுத்த அளவைப் பற்றிய போட்டிகள் தேவையில்லை.
இது மனிதாபிமானம் காட்ட வேண்டிய தருணம். கடந்த விஷயங்களைப் பற்றி அறிவுரை சொல்ல முடியாது. ஆனால் இனி ஒரு தலைவராக அவர் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். தற்போது யாரையும் குற்றம் சாட்டும் நேரமல்ல,” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.