“இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது” – கரூரில் நடிகை அம்பிகா பேட்டி
“கரூர் சம்பவம் குறித்து யாரையும் அல்லது எந்தக் கட்சியையும் குறைசொல்ல அல்ல, இனிமேல் இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் வந்துள்ளேன்,” என நடிகை அம்பிகா தெரிவித்தார்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற துயரமான சம்பவ இடத்தை நடிகை அம்பிகா நேரில் பார்வையிட்டார். பின்னர் உயிரிழந்த 2 வயது துருவ் விஷ்ணுவின் இல்லத்துக்குச் சென்று அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதேபோல் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்த ஆனந்த் ஜோதி என்பவரையும், அவர் இழந்த மனைவி மற்றும் இரு மகள்களின் மரணத்திற்காக ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அம்பிகா கூறியதாவது:
“கரூரில் நடந்த துயரமான சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்ல வந்துள்ளேன். யாரையும் குறைசொல்லவோ, அரசியல் நோக்கத்தோடு வரவோ இல்லை. இனிமேல் இப்படி ஒரு விபத்து நடக்கக் கூடாது என்பதே என் வேண்டுகோள்.
அரசியல் கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என அரசும், கட்சிகளும் அறிவுறுத்தி வருகின்றன. ஆனாலும், சிலர் அதை மீறி குழந்தைகளுடன் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். அவர்களை அடித்து தடுக்க முடியாது, ஆனால் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவராக அல்ல; மனித நேயத்தின் அடிப்படையில் தான் கரூர் வந்துள்ளேன்,” என நடிகை அம்பிகா தெரிவித்தார்.