நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்தியவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் வழக்குகள் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் (71) தலைமை நீதிபதியை நோக்கி காலணியை வீசி தாக்க முயன்றது கண்டிக்கத்தக்க செயல் எனக் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறது.

‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை ஏற்க முடியாது’ என கூச்சலிட்ட அவர், பாதுகாவலர்களால் உடனடியாக வெளியேற்றப்பட்டபோதும், அவர்மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மூடநம்பிக்கைகளையும், மதவெறி சிந்தனைகளையும் ஊக்குவிக்கும் சனாதனக் கொள்கைகளுக்கு எதிராக சமூக நீதி, சமத்துவம் போன்ற உயர்ந்த கருத்துக்களை முன்வைத்து பல புரட்சியாளர்கள் நீண்ட காலம் போராடியுள்ளனர். அந்தப் பாரம்பரியத்தையே காப்பாற்றும் வகையில் இந்திய அரசியலமைப்பு, தீண்டாமை போன்ற செயல்களை கடுமையான குற்றமாக அறிவித்துள்ளது.

இந்த அரசியலமைப்பை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உச்ச நீதிமன்றத்தின் மரியாதை மற்றும் மாண்பை குலைக்கும் விதத்தில் நடந்த இந்தச் செயல், வகுப்பு வாத மற்றும் மத வெறி மனப்பான்மையின் வெளிப்பாடாகும். இது ஒரு பயங்கரவாதச் செயலாகவே கருதப்பட வேண்டும்.

நீதிபதி கவாய் உள்ளிட்ட நீதிபதிகள் உயர்ந்த மனிதாபிமானத்துடன் குற்றவாளியை மன்னிக்கலாம்; ஆனால், நீதித்துறை மரியாதையை சீர்குலைக்கும் இந்த தாக்குதல் சட்டரீதியாகக் கடுமையாகப் பொருட்படுத்தப்பட வேண்டும்.

எனவே, குற்றவாளி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர் சட்டத்தின் குறுக்குவழிகளில் தப்பிச் செல்லாமல் தடுத்து, கடுமையான தண்டனை வழங்க மத்திய உள்துறை அமைச்சகமும், டெல்லி காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box