அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு திரும்பினார்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (86) இதயப் பிரச்சினை காரணமாக கடந்த 5ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் குழுவினர் அவரை பரிசோதித்து தேவையான சிகிச்சையை அளித்தனர்.
அவரது உடல்நிலை குறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராமதாஸ் செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அப்போது செய்தியாளர்கள் “மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொன்னார்களா?” என்று கேட்டபோது, “எனக்கு ஓய்வே கிடையாது” என்று அவர் புன்னகையுடன் பதிலளித்தார்.
இதையடுத்து பாமக வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ் அப்போலோ மருத்துவமனையில் இதய சம்பந்தமான சிகிச்சை பெற்றார். ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் எந்தப் பிரச்சனையும் இல்லை; ரத்த ஓட்டம் நன்றாக உள்ளது, இதயம் இயல்பாக செயல்படுகிறது என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நற்செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரை நலம் விசாரிக்க பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
இமயமலைக்கு ஆன்மிகப் பயணத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் ராமதாஸை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததும் குறிப்பிடத்தக்கது.